

ராசிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் குடும்பம் நடத்த முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் ஊதியம் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.