

சிவகங்கை அருகே செம்பனூர் கீழத் தெருவில் முறையாகக் குடிநீர் விநியோகிக்கவில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று காலை 6.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் காளையார் கோவில் ஒன்றியத் தலைவர் ராஜேஸ்வரி, டிஎஸ்பி பால்பாண்டி, வட்டாட்சியர் ஜெயநிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மூன்று நாளில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிவகங்கை-இளையான்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.