Last Updated : 22 Jul, 2021 03:14 AM

 

Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியமில்லாததால் விரக்தி - வ.து.நடராஜன் திமுகவில் இணைந்தது ஏன் ? :

அதிமுக, அமமுக இணைப்பு சாத்தியமில்லாததால் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனும், அவரது மகனும் அமமுக மாவட்டச் செயலாளருமான வ.து.ந. ஆனந்த்தும் ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஏ.மணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன். இவர் 2002, 2003-ல் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அமைச்சரவையில் 2 முறை தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்த நடராஜனுக்கு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

அதனையடுத்து டிடிவி.தினகரனின் அமமுகவில் இணைந் தார். அங்கு அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியக்குழு தலைவராகவும், அதிமுக ஒன்றியச் செயலாளராகவும் இருந்த அவரது மகன் வ.து.ந.ஆனந்தும் அமமுகவில் இணைந்தார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஆனந்த் அமமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றார், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவாடானை தொகுதியில் 32,000 வாக்குகளை பெற்றார்.

அதனையடுத்து சசிகலா சிறையில் இருந்து வந்ததும், அதிமுகவுடன் அமமுக இணைந்துவிடும். அதன் மூலம் பதவிகளை பெறலாம் என்றிருந்தனர். அதுவும் நடக்காமல் போனது.

இந்நிலையில் அதிமுகவும் எதிர்க்கட்சியாக மாறிவிட்டது. அதனால் அமமுகவில் தொடர்ந்தால் எதிர்காலம் இல்லாமல் போய்விடும். அதிமுகவிலும் இரட்டைத் தலைமை, சசிகலாவின் தலையீடு போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன.

இதனால் தந்தையும், மகனும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இவர்களுடன் அதிமுக கடலாடி ஒன்றியச் செயலாளர் பத்மநாபன், போகலூர் ஒன்றியச் செயலாளர் நாகநாதன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x