

காயல்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த4.9 டன் விரலி மஞ்சளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் சமையலுக்கான விரலி மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க பாதுகாப்பு படையினர், மத்திய, மாநில போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போதிலும் மஞ்சள் கடத்தல் தொடர்கிறது.
காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரை பகுதியில் இருந்து மஞ்சள் கடத்தப்படுவதாக, திருச்செந்தூர் கடலோர காவல் நிலையபோலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உதவி ஆய்வாளர் வீரபாண்டியன் தலைமையில் போலீஸார் நேற்று அதிகாலை 1 மணியளவில் அந்த பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து சிலர் வெள்ளை நிற மூட்டைகளை படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர். உடனே போலீஸார் அந்த பகுதிக்கு விரைந்தனர். போலீஸாரை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடல் வழியாக தப்பிவிட்டனர்.
அங்கு போலீஸார் நடத்திய சோதனையில் லாரியில் தலா 35 கிலோ எடை கொண்ட 140 மூட்டைகளில் மொத்தம் 4,900 கிலோ விரலி மஞ்சள் இருந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம். மஞ்சள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீஸார், லாரியின் ஓட்டுநர் தூத்துக்குடி சுல்தான் நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகளை போலீஸார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், கடந்த 9-ம் தேதி திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1,800 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.