

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியாருக்குச் சொந்தமான பழுதடைந்த கட்டிடம் இடிந்ததில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து பர்கூர் மலைப் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருட்களை அந்தியூரில் நடக்கும் வாரச் சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். அந்தியூரில் திங்கள் கிழமைதோறும் வாரச் சந்தை கூடுவது வழக்கம்.
இந்நிலையில், பர்கூர் தட்டக் கரையைச் சேர்ந்த சித்தன் (55), சின்ன செங்குளத்தைச் சேர்ந்த மாதேவன் (55), தொட்டைய தம்படியைச் சேர்ந்த சின்னப்பையன் (35), சின்ன செங்குளத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30), மகேந்திரன் (17), கொங்காடையைச் சேர்ந்த சிவமூர்த்தி (45) ஆகியோர் அந்தியூர் சந்தையில் விளைபொருட்களை விற்பதற்காக நேற்று முன்தினம் மாலை அந்தியூர் வந்துள்ளனர்.
அந்தியூர் தேர்வீதியில் உள்ள ராஜசேகர் என்பவருக்குச் சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை முன்பாக படுத்து தூங்கியுள்ளனர். ஏற்கெனவே பழுதடைந்திருந்த அந்தக் கட்டிடம், இடிப்பதற்காக காலி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் 18-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் விவசாயிகள் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து வந்த அந்தியூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகளான சித்தன், மாதேவன், சின்னப்பையன் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ராஜேஷ், சிவமூர்த்தி, மகேந்திரன் ஆகியோர் காயமடைந்து அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.