காளையார்கோவில் அருகே செல்லமாக வளர்த்து - இறந்துபோன 40 நாய்களுக்காக வீட்டை சுற்றி சமாதி எழுப்பிய முதியவர் :

காளையார்கோயில் அருகே சித்தத்தூரில் நாய்களுக்காக கட்டிய சமாதிகளுடன் முதியவர் தங்கச்சாமி.
காளையார்கோயில் அருகே சித்தத்தூரில் நாய்களுக்காக கட்டிய சமாதிகளுடன் முதியவர் தங்கச்சாமி.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே செல்லமாக வளர்த்து இறந்துபோன 40 நாய்களுக்காக 77 வயது முதியவர் வீட்டைச் சுற்றிலும் தனித்தனியாக சமாதிகளை எழுப்பியுள்ளார்.

காளையார்கோயில் அருகே சித்தத்தூரைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (77). இவர் கிராமத்துக்கு வெளியே சுவர்கள் இல்லாத சிறிய ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நாய்கள் வளர்ப்பதில் அலாதி பிரியம். அவர் வளர்த்த நாய் இறந்ததும் உடனே மற்றொரு நாய் வளர்க்கத் தொடங்கி விடுவார்.

சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை வளர்ப்பார். நாய்கள் இறந்ததும், அதை வெளியில் வேறு இடத்தில் புதைக்க மனமின்றி வீட்டைச் சுற்றிப் புதைத்துள்ளார். மேலும் மண்ணால் சமாதி கட்டி வழிபட்டு வருகிறார். இதுவரை 40 நாய்களுக்கு சமாதி கட்டியுள்ளார்.

இது குறித்து தங்கச்சாமி கூறியதாவது: எனக்கு 12 சகோதர, சகோதரிகள். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் உள்ளனர். எனக்கு திருமணமாகாததால் தனியாக வசிக்கிறேன். அரசின் உதவித்தொகையில்தான் நானும், எனது குழந்தைகளான நாய்களும் சாப்பிடுகிறோம்.

ஒவ்வொரு நாய்க்கும் சரிதா, தேவி, துரைச்சாமி, நல்லம்மா, வெள்ளச்சி, ராமர் என மனிதப் பெயர்களை வைத்துதான் அழைப்பேன். நாய்கள் இறந்தாலும் என்னை விட்டுப் பிரியக் கூடாது என்பதற்காக வீட்டைச் சுற்றிலும் புதைத்து சமாதி எழுப்பினேன். அவைகள் குறித்து நினைப்பு வரும்போது வழிபடுவேன், என்றார்.

நாய்களுக்குச் சமாதி கட்டி வாழும் முதியவர் தங்கச்சாமியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in