

மானாமதுரை, உத்தமபாளையம் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தேர்வுநிலைப் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,257 பேர் உள்ளனர். தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
பேரூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.6 கோடியைக் கடந்துவிட்டது. செங்கல் தயாரிப்பு, மண்பாண்டத் தொழிலுக்கு இப்பகுதி சிறப்புப் பெற்றது. மேலும் சிப்காட் தொழில்வளாகத்தில் பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. இங்கு ரயில்வே சந்திப்பு உள்ளது. மேலும் மானாமதுரை-தஞ்சை, மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலைகளும் இவ்வழியாகச் செல்கின்றன. இவ்வூரை வைகை ஆறு 2 பகுதிகளாகப் பிரிக்கிறது. 2 பகுதிகளும் வேகமாக வளர்ந்துவரும் பகுதிகளாக உள்ளன. இந்நகருக்கு பல்வேறு காரணங்களுக்காக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
மக்கள்தொகை, ஆண்டு வருவாய் அடிப்படையில் மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அரசுக்குக் கருத்துரு அனுப்பினார். ஆனால், அரசியல் அழுத்தம் இல்லாததால் அக்கருத்துரு கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி, மானாமதுரையை நகராட்சி யாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியும் நகராட்சியாக தரம் உயருகிறது.
இவை தவிர தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், நெல்லை மாவட்டம் களக்காடு, பனங்குடி, வடக்கு வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு உள்ளிட்ட 33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்பு உள்ளது.