விராலிமலை அருகே சாலை விரிவாக்கத்துக்காக -  வெட்டி அகற்றப்படும் பழமையான புளியமரங்கள் :  சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

விராலிமலை அருகே சாலை விரிவாக்கத்துக்காக - வெட்டி அகற்றப்படும் பழமையான புளியமரங்கள் : சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

Published on

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அருகே சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில் பழமையான புளிய மரங்களை வெட்டி அகற்றி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

விராலிமலையில் இருந்து நீர்ப்பழனி, ஆலங்குடி வழியாக களமாவூர் வரை ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதில், ஆவூர் 4 சாலை முதல் சித்தாம்பூர் வரை ஆலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிக்கு இடையூறாக இருந்த 26 புளிய மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருச்சி பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை விஞ்ஞானி எ.குமரகுரு கூறியது:

வளர்ச்சிப் பணிகள் அவசியம் என்றாலும் பழமையான நாட்டு ரக புளிய மரங்கள் வெட்டப்படுவதை ஏற்கமுடியாது. அவற்றை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடவு செய்திருக்கலாம். பசுமைக் குழுவினர் உடனடியாக இந்தப் பகுதியை ஆய்வு செய்து, மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கூறியபோது, “சாலை பணிக்கு இடையூறாக இருந்ததால் கோட்டாட்சியரின் உத்தரவுப்படி மரங்கள் அகற்றப் படுகின்றன.

மேலும், வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதிலாக 10 மரக்கன்றுகள் வீதம் நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in