

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 600 இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கும் வகையில், வேதாந்தா அறக்கட்டளை சார்பில், ஸ்டெர்லைட் குடியிருப்பு வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மையத்தில் தையல், வெல்டிங், பொது மின்சார பயன்பாட்டு பயிற்சி, சரக்கு போக்குவரத்து, உணவு பதப்படுத்துதல் ஆகிய 5 பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தொடர்ந்து மேலும் பல துறைகளுக்கு பயிற்சி விரிவுபடுத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் 300 முதல் 400 மணி நேர பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக 600 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு ள்ளது. பின்னர், இது 1,500 இளைஞர்களுக்கு விரிவுபடுத்தப்படும். பயிற்சி பெறுவோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிர்லா எடுடெக் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஏ.சுமதி மையத்தை திறந்து வைத்தார். தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.