வேலூரில் வீட்டின் மீது - பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது :

பையாஸ்.
பையாஸ்.
Updated on
1 min read

வேலூரில் மழையால் சகதி தெறித்த தகராறில் நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியும் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் சைதாப்பேட்டை பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அப்ரோஸ் (24). ஆட்டோ ஓட்டுநர். இவர், அதே பகுதியில் நேற்று முன்தினம் மாலை சாலையோரம் நின்றிருந்தார். அவ்வழியாக அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கலீல் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அவரது வாகனத்தின் டயரில் இருந்து தெறித்த சகதி அப்ரோஸ் மீது பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கிவிட்டனர்.

இதற்கிடையில், கலீல் வீட்டுக்கு நள்ளிரவு சென்ற அப்ரோஸ் உள்ளிட்ட 3 பேர் திடீரென பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். பின்னர், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் கூச்சல் போட்டபடி வெளியே வந்தனர். இதைப்பார்த்த அப்ரோஸ் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அப்ரோஸ் தலைமையில் வந்த கும்பல் கலீல் வாகனத்துக்கு பதிலாக அவர் வசிக்கும் மாடி வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் நைமுதீன் (30) என்பவருக்கு சொந்தமான வாகனத்தை தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்த தகவலின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தீயில் எரிந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசியதுடன் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியதாக அப்ரோஸ் மற்றும் அவரது நண்பர்களான சைதாப்பேட்டை எடத்தெருவைச் சேர்ந்த அப்துல்லா (23), காசிம் தெருவைச் சேர்ந்த பையாஸ் (27) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in