

தமிழக அரசு சார்பில் சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 1992-ம் ஆண்டுதொடங்கப்பட்டது. இரண்டு பெண்குழந்தைகள் இருந்தால், இத்திட்டத்தின் கீழ் தலா ரூ.25 ஆயிரம் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யப்படும்.
குழந்தைக்கு 18 வயது முடிந்தவுடன் முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்ந்து 19 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பெண்குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பினாலும், அவர்கள் 10-ம் வகுப்பு வரைபடித்திருந்தால் தான் முதிர்வு தொகை வழங்கப்படும் என, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு காரணமாக கடந்த15 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்துள்ள பெண்குழந்தைகளில் குடும்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு முதிர்வு தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரைவிண்ணப்பித்து திட்டத்தில் இணைந்தவர்களுக்கு கல்வித் தகுதியை நிர்ணயம் செய்யக்கூடாது என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்துள்ள குழந்தைகள் கண்டிப்பாக 10-ம் வகுப்பை எட்டியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் குழந்தைகளை கண்டிப்பாக 10-ம் வகுப்பு வரை படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தில் இணைந்துள்ள பெண் குழந்தைகளில் சிலர், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி இடைநிற்றலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் தற்போது திருமண வயதை எட்டி உள்ளனர். அவர்களுக்கான முதிர்வு தொகையை விடுவிக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்து அரசு உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து, அதனை அமல்படுத்த வேண்டும்” என்றார் அவர்.