

நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, மேல் கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, கிளன்ராக் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி கூறும்போது, ‘‘உதகை, குன்னூர், கேத்தி சாலை மற்றும் ஒரு சில இடங்களில் சில மரங்கள் விழுந்துள்ளன. பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தரலாம்’’ என்றார்.
நேற்று மாலை நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 38 மி.மீ. மழை பதிவானது. அப்பர் பவானியில் 29, பாடாந்துறையில் 28, பந்தலூரில்14, நடுவட்டத்தில் 12, சிறுமுல்லியில் 10, சேரங்கோட்டில் 10, கூடலூரில் 4, தேவாலாவில் 3, உதகையில் 3 மி.மீ. மழை பதிவானது.