

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகத்தில் ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நேற்று மேற்கொள்ளப்பட்டது.
விண்வெளிக்கு ஏவும் ராக்கெட்டுகளின் என்ஜின் சோதனைகள்இம்மையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை ஐஎஸ்ஆர்ஓ செயல்படுத்தி வருகிறது.ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் பயன்படுத்தும் திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் என்ஜின் சோதனை 3-வது முறையாக மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 240 விநாடி
(4 நிமிடம்) மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை திட்டமிட்ட நேரத்துக்குள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக ஐஎஸ்ஆர்ஓ வட்டாரங்கள் தெரிவித்தன.