

குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, நரசோதிப்பட்டி தெய்வானை நகர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட கோட்டம் 3-ல் தெய்வானை நகர் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு மனை பிரிவில் குழந்தைகள் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவல கத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.