Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தை நடத்த கோரி அதிமுக எம்எல்ஏ சாலை மறியல் போராட்டம் :

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் மற்றும் தரிசன விழாவை நடத்த கோரி பாண்டியன் எம்எல்ஏ மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கரோனா தடுப்புநடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. அதில் கோயில்களில் திருவிழாக்கள் நடந்த அனுமதிக் கப்படவில்லை. இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி மாத ஆருத்ரா தரினசவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவை நடத்திட தடை விதித்திருந்தது. பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் கோயில் உள்பிரகாரத்திலேயே தினமும் பஞ்ச மூர்த்தி உலாவை தீட்சிதர்கள் நடத்தி வருகின்றனர். முக்கியத் திருவிழாக்களான தேரோட்டம் வரும் 14-ம் தேதியும், தரிசன விழா வரும் 15-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோயில் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் பேரவை, பாஜக, ஆன்மிக பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தேரோட்டம், தரிசன விழாவை நடத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நடராஜர் கோவிலுக்கு சென்ற சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் தீட்சிதர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் தேரோட்டம், தரிசன விழாவை நடத்த வேண்டும் என்று கூறி பாண்டியன் எம்எல்ஏ கீழவீதியில் கீழ சன்னதி செல்லும் வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார், கருப்பு ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் பாஜக நகர தலைவர் ரகுபதி, பாஜகவினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இது குறித்துதகவல் அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார், அதிகாரிகள் சம்பவ இடத்துக்குசென்று எம்எல்ஏ பாண்டியனிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக் கையை அரசு தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x