Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

அனல்மின் நிலையம் சாம்பல் கொட்டியது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வு - எண்ணூர் கழிமுக பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கோரிக்கை

சென்னை

எண்ணூர் அனல் மின் நிலையம் கொட்டும் சாம்பலால், எண்ணூர் கழிமுகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எண்ணூர் கழிமுகப் பாதுகாப்புக் குழு மற்றும் மீனவ மக்களின் அழைப்பை ஏற்று, நீரியல் வல்லுநர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் மற்றும் மீனவ அமைப்பு நிர்வாகிகள், எண்ணூர் கழிமுகப் பகுதியில், அனல் மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் பேராசிரியர் எஸ்.ஜனகரஜான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எண்ணூர் கழிமுகப் பகுதி சார்ந்த சூழலியல் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) வெளியேற்றும் சாம்பலால், ஆரணியாறு கடலுடன் கலக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி அடைபட்டு, பாழாகியுள்ளது.

அதன் விளைவாக இப்பகுதியில் விவசாயம், உப்பளம் ஆகிய தொழில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மீன்பிடித் தொழில் அழிந்துவருகிறது. இங்கு இறால் மட்டுமே கிடைக்கிறது. அதிலும்உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உலோகங்கள், சல்பர் போன்ற ரசாயனங்கள் ஆகியவை கலந்துள்ளன. இப்பகுதி எங்கும் சாம்பல் கழிவுகளாக காணப்படுகிறது.

இப்பகுதியில் சுழலியல் கெட்டுப்போனதற்கு, இப்பகுதியில் டான்ஜெட்கோ இயக்கும் அனல் மின்நிலையம்தான் முக்கியக் காரணம். இங்கு சாம்பல் கொட்ட அனுமதி இல்லை என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அங்கு தொடர்ந்து சாம்பல் கொட்டப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் சாம்பலைக் கொட்டுவது தொடர்பாக, எத்தகைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இங்கு சாம்பலைக் கொட்டுவதால் நிலத்தடிநீர் மாசுபட்டுள்ளது. காற்றுமாசால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர். இத்தகைய வளர்ச்சி நமக்கு தேவையே இல்லை.

எனவே, புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு, இந்தப் பிரச்சினை குறித்துஆராய்ந்து, உரிய தீர்வுகாண வேண்டும். ஆற்று நீர் கடலுக்குச் செல்வதை தடுப்பதால், பெரும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x