Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகளை - திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க சட்டப்படி நடவடிக்கை : இந்து அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

“திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நகைகள், சொத்துக்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், சுசீந்திரம்தாணுமாலய சுவாமி கோயில் மற்றும் குழித்துறை தேவி குமாரி மகளிர் கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் சுமார் 1,700 ஆண்டு பழமையானது. இங்கு கடைசியாக எந்த ஆண்டுகும்பாபிஷேகம் நடைபெற்றது என்றதகவல் இல்லை. பன்னிரு சிவாலயங்களில் 7-வது சிவாலயமான இக்கோயில் திருப்பணிக்கு ரூ.1.85 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு பணி விரைவில் தொடங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 491 கோயில்களில் 5 கோயில்கள் தான் அதிகளவு வருமானம் ஈட்டக்கூடிய கோயில்களாக உள்ளன.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்கோயிலில் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குடமுழுக்கு பணி இன்று வரை நிறைவடையவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்தஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவட்டாறு கோயில் நகை, சொத்துக்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நகைமற்றும் சொத்துக்களை முறையாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் மா.அரவிந்த், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x