

தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறை சார்பில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை கனிமொழி எம்.பி. மற்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
கூட்டுறவுத் துறை சார்பில் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர். அமைச்சர் பெ.கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் 847 பயனாளிகளுக்கு ரூ.4.86 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன்கள், மகளிர் உதவிக்குழுக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டன. மேலும் கரோனா முழு ஊரடங்கு காலத்தில் வீடு வீடாக சென்று காய்கறிகள் விற்பனை செய்ய கூட்டுறவுத் துறைக்கு உதவிய இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.