மழையால் வயலில் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படாததால் நடவுப் பணிகள் பாதிப்பு :

தஞ்சாவூர் அருகே திங்களூரில் அண்மையில் பெய்த காற்றுடன் கூடிய மழையால் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்.
தஞ்சாவூர் அருகே திங்களூரில் அண்மையில் பெய்த காற்றுடன் கூடிய மழையால் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்.
Updated on
1 min read

திருவையாறு அருகே தொடர் மழையால் வயலில் சாய்ந்த மின் கம்பங்கள் அகற்றப்படாத நிலையில், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படாததால், குறுவை நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், திருவையாறு வட்டாரத்தில் அதிகமான மழையளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில், திருவையாறு பகுதியில் அண்மையில் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் வாழை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதில், திங்களூர் பகுதியில் உள்ள வயல்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு, 5 நாட்களாகியும் சாய்ந்த மின் கம்பங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. மின் இணைப்பும் வழங்கப்படவில்லை.

அப்பகுதியில் 30 ஏக்கரில் குறுவை நாற்றங்கால் விடப்பட்டு, நடவுக்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதால், நாற்றங்கால்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதுடன், வயல்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

எனவே, உடனடியாக மின் கம்பங்களை சரிசெய்து, மின் இணைப்பு வழங்கினால்தான் குறுவை நாற்றங்கால்களைக் காப்பாற்றி, நடவு செய்ய முடியும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in