பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் :  சேம்பர் ஆஃப் காமர்ஸ் வேண்டுகோள்

பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் : சேம்பர் ஆஃப் காமர்ஸ் வேண்டுகோள்

Published on

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என சேம்பர் ஆஃப் காமர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் என்.டி.பாலசுந்தரம், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சுந்தர நாராயணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், வணிகர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து வணிக நிறுவனங்களும் 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும். தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல, வணிக நிறுவனங்களுக்கு வரும் நுகர்வோருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தி, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆட்சியர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in