

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(62). இவரது மனைவி அறிவழகி(48). இவர்களின் மகன் முருகானந்தம் சென்னையில் பணிபுரிந்து வந்ததால், தம்பதியர் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி தம்பதி இருவரையும், மேல உசேன் நகரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ், மணிகண்டன், செங்கல்பட்டு மாவட்டம் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த சத்யா, யுவராஜ், ராம், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து குன்னம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சந்தோஷ், சத்யா, யுவராஜ், ராம், மணிகண்டன் ஆகிய 5 பேரை ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய நபரான சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகேஷ்(22) என்பவரை பெரம்பலூர் போலீஸார் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்தனர்.
பின்னர், அவரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.