பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பு : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பு  :  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர் வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமாகா டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தலில் வெற்றி- தோல்வி என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் சகஜம். அது எங்களுக்கும் பொருந்தும். தேர்தல் களத்தில் பல்வேறு காரணங்களால் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு கட்சிக்கு பலம் சேர்க்கவும், புத்துணர்வு அளிக்கவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

நிகழாண்டு காமராஜர் பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாட உள்ளோம்.

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் ஏமாற்றம் அடையவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இப்போதைய இலக்கு.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கட்டுப்படுத்த வரிகளைக் குறைப்பது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

கரோனாவில் அரசியல் கூடாது. 3-வது அலை வந்தாலும் அதைச் சமாளிக்கும் வகையில் உரிய கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு மாநிலங்களிடத்தில் பாரபட்சம் காட்டவில்லை, காட்டக் கூடாது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டின் விவசாய பகுதிகள் பாலைவனமாகிவிடும். இதை மத்திய அரசு உணர்ந்து கர்நாடகத்துக்கு அனுமதி அளிக் கக் கூடாது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கடைமடையைச் சென்று சேரவில்லை. இதனால், விதைத்த நெல் மணிகள் 20 நாட்களாகியும் முளைக்கவில்லை. எனவே, கடைமடை வரை தண்ணீர் செல்ல அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர் களைக் குழப்பக் கூடாது. அரசி யலை இதில் புகுத்தக் கூடாது என்றார்.

கட்சியின் மாவட்டத் தலைவர்கள் டி.குணா, கேவிஜி.ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in