கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து தாலுகாவிலும் - கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க பிரதமரிடம் கோரிக்கை : மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தகவல்

கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து தாலுகாவிலும்  -  கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க பிரதமரிடம் கோரிக்கை :  மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தகவல்
Updated on
1 min read

கல்வி தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு தாலுகாவிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி பாஜக எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 4 பாஜக எம்எல்ஏ-க்களும் அண்மையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தோம். அப்போது, அனைத்து எம்எல்ஏக்களின் கோரிக்கைகளையும் பிரதமர் தனித்தனியாக கேட்டறிந்தார்.

தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உருவாக்க வேண்டும். கல்வி தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு தாலுகாவிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளோம். “சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம்” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிமுக தலைமை இதுதொடர்பாக கருத்து எதுவும் கூறவில்லை.

‘பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்’ என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. மற்ற மாநிலங்களில் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்துள்ளது. தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் விலை குறைந்து பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பின்கீழ் கொண்டுவர ஏற்கெனவே தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஒத்துவரவில்லை. திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஜெய்ஹிந்த் தொடர்பாக பேசியது தவறு என்பது அவருக்கே புரிந்திருக்கும். இனி அது போல் நடக்காது என நினைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in