கோவை, திருப்பூரில் 865 அரசுப் பேருந்துகள் இயக்கம் : பல்லடத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம்

கோவை, திருப்பூரில் 865 அரசுப் பேருந்துகள் இயக்கம் :  பல்லடத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம்
Updated on
1 min read

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கிய நிலையில், முதல்நாளான நேற்று அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 865 பேருந்துகள் இயக்கப்பட்டன.

கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே 10-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. கரோனா பரவல் குறையாத கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மட்டும் முதலில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கியது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டதால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நேற்று முதல் மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுதொடர்பாக கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "கோவை மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கோவையில் நேற்று 338 நகர பேருந்துகள், 197 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 535 பேருந்துகள் இயக்கப்பட்டன.

சில வழித்தடங்களில் பயணிகளின் தேவையைப்பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, தேனிக்கும், காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக - கேரள எல்லையான வாளையாறு வரை நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 2 முறை வழித்தடத்தில் சென்று வந்தபிறகு பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

திருப்பூர்

ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீண்ட நாட்களுக்கு பிறகு மாநகர் உட்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in