

கடலூர் மாவட்ட எல்லையில் புதுச்சேரி ரவுடிகள் மீண்டும் வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்ட எல்லையில் கடந்த வாரம் இரு ரவுடி கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்ட திலும் 3 பேர் காயம் அடைந்தனர். ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடலூர், புதுச்சேரியைச் சேர்ந்த 11 ரவுடிகளை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட எல்லைக் குள் புதுச்சேரி ரவுடிகள் மோதிக்கொண்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் எச்சரிக்கை விட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி ரவுடிகள் கடலூர் மாவட்ட எல்லைக்குள் வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையி னர் கூறுகையில், “புதுச்சேரி மாநிலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் முத்தரசன் (22), பெங்களூருவில் வேலை பார்த்து வந்தவர் கரோனா ஊரடங்கால் ஊர் திரும்பினார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பர் பிரதாப் (22) என்பவருடன் கடலூர் மாவட்டம் கிளிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சந்திக்குப்பம் பகுதியில் பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது அவர் மீது மோதுவது போல் மற்றொரு பைக்கில் வந்தவர்களை தட்டிக்கேட்டபோது 7 பேர் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கினர். அப்போது அந்த கும்பல் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் காயமடைந்த முத்தரசன், பிரதாப் இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்ட எல்லைக்குள் ஒரே வாரத்திற்குள் இரண்டு முறை புதுச்சேரி ரவுடிகள் வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டது கடலூர் மாவட்ட போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.