

தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உள்ள கோயில்களில் சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் கடந்த ஏப்ரல்தொடங்கி பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றுபரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை 1000-க்கும் மேல் இருந்த தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 231-ஆக குறைந்திருந்தது.
தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்துக்குஅனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழிபாட்டுத்தலங்களும் நிலையான அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிவழங்கப்பட்டுள்ளது. திருவிழாக் கள், குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து, திருப்பூரில் உள்ள கோயில்களில் கோபுரங்கள் தொடங்கி, சுவாமிகளின் சன்னதிகள், பக்தர்கள் செல்லும் வளாகங்கள், பூஜைகள், பிரார்த்தனை, வழிபாடு நடைபெறும் பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. திருப்பூரில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் கோயில், வீரராகவப் பெருமாள் கோயில்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதேபோல கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி
இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் கருணாநிதி கூறும்போது, ‘‘கோயில்களில் நாளை (இன்று) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு, கோயிலுக்குள் வர வேண்டும். அம்மனை வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் செல்ல மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி உண்டு. அர்ச்சனை, அபிஷேகம் கிடையாது. தேங்காய், பழம், பூ மாலை போன்றவற்றை வாங்கி வர வேண்டாம். மிளகாய் அரைத்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.