

மது போதையில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் அருகே வீசாணம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வையாபுரி (60). அவருக்கு நல்லம்மாள் (55) என்ற மனைவி, வெங்கடேஷ் (40) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள கீற்றுக் கொட்டகையில் வையாபுரி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மது போதையில் இருந்த வெங்கடேஷ், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் வையாபுரியை, வெங்கடேஷ் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.