Published : 05 Jul 2021 03:15 AM
Last Updated : 05 Jul 2021 03:15 AM

வேலூர் மீன் மார்க்கெட்டில் - சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் : கரோனா பரவல் அதிகரிக்கும் என குற்றச்சாட்டு

வேலூர் மீன் மார்க்கெட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு சில்லறை வியாபாரம் தொடங்கியுள்ளதால் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமல் பலர் மீன்களை வாங்க ஒன்றாக திரண்டதால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

வேலூர் - பெங்களூரு சாலையில் கோட்டை அகழி எதிரே புதிய மீன்மார்க்கெட் உள்ளது. இங்கு, 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

அதிகாலை 2 மணிக்கு மேல் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 80 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 100 முதல் 150 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனால், வேலூர் மீன் மார்க்கெட் மூடப்பட்டது. அதன்பிறகு கரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியவுடன், மீன்கள் மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 3 வாரங்களாக மீன் மார்க்கெட் வெளியே மொத்த வியாபாரம் மட்டும் நடைபெற்று வந்தது. வேலூர் மக்கான் பகுதியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மீன் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடந்த 28-ம் தேதி தொடங்கியது.

வேலூர், திருப்பத்தூர், தி.மலை,ராணிப்பேட்டை போன்ற மாவட் டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் மக்கான் பகுதியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த சில்லறை மீன் வியாபாரம் அகற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஜூலை 5-ம் தேதி (இன்று) முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலூர் மீன் மார்க்கெட்டில் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நேற்று தொடங்கியது. இதனால், மகிழ்ச்சியடைந்த மீன் பிரியர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்க நேற்று ஒரே இடத்தில் சமூக இடைவெளியை மறந்து கூட்டம், கூட்டமாக குவிந்தனர்.

மீன் வியாபாரிகளும், மீன் வாங்க வந்தவர்களும் ஒரே இடத்தில் தனி மனித இடைவெளியை மறந்து வியாபாரத்தில் மூழ்கியதால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x