

கனரா வங்கியிடம் ஏலத்தில் எடுத்த சொத்துக்கு 2 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை என்று, அவிநாசியை சேர்ந்தவர் தமிழக முதல்வருக்கு புகார் மனு அளித்தார்.
இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில், "அவிநாசி வட்டம் உப்பிலிபாளையம் கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான பூமி மற்றும் பிற சொத்துகளையும் ரூ.4 கோடி அடமானம் வைத்து, கோவை கனரா வங்கிக் கிளையில் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில், வாங்கிய கடனை அவர் திரும்ப செலுத்தாததால், சொத்துகளை கனரா வங்கி ஏலம் விட்டது. அதனை நான் ஏலம் எடுத்தேன். கடந்த 2019 டிசம்பர் 6-ம் தேதி கிரையச் சான்றிதழும் பெற்றேன். இது அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரையச் சான்றிதழின்படி, நான் உரிமையாளர் ஆவேன். பதிவு செய்யபட்ட கிரையச் சான்றிதழ்படி எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தர, 2019 டிசம்பர் 27-ம் தேதி உப்பிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தேன். ஆனால், எந்தவிக காரணமும் இன்றி எனது மனு நிராகரிக்கப்பட்டது. அதேசமயம், என்னுடன் ஏலம் எடுத்த மற்றொரு நபர், அவரது பெயருக்கு 3 சொத்துகள் பட்டா மாறுதலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனது பெயருக்கு நான் ஏலம் எடுத்த 2 சொத்துகளை பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பது சட்டத்துக்கு புறம்பானது. பட்டா மாறுதல் செய்யக் கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தேன். ஆனால், இரண்டு ஆண்டுகளாக நிராகரிக்கப்படுகிறது. அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. பொதுமக்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அரசு அதிகாரிகளால்தான், பொதுமக்களிடையே அரசுக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன், எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.