

திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்ற 5 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர் என மாவட்டசித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் 52, கரூர் மாவட்டத்தில் 31, அரியலூர் மாவட்டத்தில் 22, பெரம்பலூர் மாவட்டத்தில் 18 என மொத்தம் 129 ஆயுஷ் மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில் கரோனா தொற்று காலங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் சூரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, சித்த மருந்துகள் ரூ.1 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மருந்துகளை 50 சதவீதம் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக கரோனா தொற்றை கட்டுப்படுத்தியதில், குணப்படுத்தியதில் சித்த மருத்துவம் பெரும்பங்காற்றி வருகிறது.
திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணடைந்துள்ளனர். இம்மையங்களில் இதுவரை ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. எதிர்வரும் மழைக்கால நோய் தடுப்பு மருந்துகள் அனைத்தும் ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளில் இருப்பில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.