Published : 04 Jul 2021 03:15 AM
Last Updated : 04 Jul 2021 03:15 AM
தி.மலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் வசிப்பவர் பெண் விவசாயி லட்சுமிகாந்தம்மாள்(53). கணவரை இழந்து வாழ்ந்து வரும் இவர், தனது குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்து பிழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் சார்பில் உயர்மின் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு தொடக்கம் முதலே, லட்சுமிகாந்தம் மாள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். உயர் மின் கோபுரம் அமைக்க தோண்டிய பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், அவரது நிலத்தில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்துக்கு வயர்கள் இணைக்கும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றுள்ளது. இதையறிந்த விவசாயி லட்சுமிகாந்தம்மாள், உயர்மின் கோபுரம் மீது ஏறி, உரிய இழப்பீடு கொடுத்த பிறகு பணியை தொடர வேண்டும் என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், உயர்மின் கோபுரம் அமைத்துக்கொள்வதற் கான இழப்பீடு தொகை முழுமையாக வழங்கவில்லை, இழப்பீடு தொகையை கொடுத்த பிறகு பணியை தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த காவல்துறை யினர், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இழப்பீடு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, 1 மணி நேர போராட்டத்தை கைவிட்டு, உயர்மின் கோபுரத்தில் இருந்து லட்சுமிகாந்தம்மாள் கீழே இறங்கி வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT