Published : 04 Jul 2021 03:15 AM
Last Updated : 04 Jul 2021 03:15 AM

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் - தற்காலிக கரோனா சிகிச்சை மைய கூடாரங்கள் அகற்றம் :

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இந்தாண்டு மார்ச் மாதம் வரை சுமார் 22 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஏப்ரல் 3-வது வாரத்தில் இருந்து கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொற்று எண்ணிக்கை உச்சபட்ச அளவாக மாறியது. கடந்த ஓராண்டாக முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கையை கடந்த ஏப்ரல் மற்றும் மே என இரண்டு மாதங்களில் எட்டியது.

கரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக் கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டன.

இதில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் 910 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதில், 524 படுக்கைகள் ஆக்சிஜன் மற்றும் ஐசியு வசதியுடன் ஏற்படுத்தப்பட்டது. 16 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பு இருந்தும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கைகளுடன் கூடிய மூன்று தற்காலிக கரோனா வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், மாவட் டத்தில் தொற்று பரவல் வேகமாக குறைய ஆரம் பித்தது. இதனால், கரோனா தற்காலிக சிகிச்சை மையங்களின் பயன்பாடும் குறைய ஆரம்பித்தது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனா நோயாளி களின் எண்ணிக்கையும் குறைந்ததால் கரோனா சிறப்பு வார்டில் இருந்த படுக்கைகள் பிற வார்டுகளுக்கு படிப் படியாக மாற்றி வருகின்றனர். அதே போல், தற்காலிக கரோனா வார்டாக செயல்பட்ட கூடாரத்தின் அவசியமும் இல்லாததால் இரண்டு கூடாரங்களையும் அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் செல்வி கூறும்போது, ‘‘கரோனா இரண்டாம் அலையில் சுமார் 7 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தற்காலிக கரோனா மையம் தொடங்கியதும் அங்கு பரிசோதனை செய்யும் மையமாக பயன்படுத்தி வந்தோம். தொற்று குறைந்ததால் தற்காலிக மையத்தின் அவசியம் தேவையில்லை. அதை அமைத்துக் கொடுத்த தனியார் நிறுவனமே அகற்றியுள்ளனர் ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x