Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM

காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து : திட்டத்தை தொடங்க புதுவை ஆளுநர், முதல்வருடன் இலங்கை துணைத் தூதர் சந்திப்பு

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத்தூதர் வெங்கடேஸ்வரன் சந்தித்து கலந்தாலோசனை நடத்தினார்.

தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வெங்கடேஸ்வரன் துணைநிலை ஆளுநர் தமிழிசையை நேற்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவுகள், அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

ஆளுநர் அப்போது, புதுச்சேரியில் பாரதி, பாரதிதாசன், மகான் அரவிந்தர் போன்றவர்கள் வாழ்ந்ததால் ஒரு விடுதலை களமாகவும், ஆன்மிக பூமியாகவும் திகழ்வதைக் குறிப்பிட்டார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க முயற்சி, மருத்துவச் சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு இலங்கை உடனான போக்குவரத்து தொடர்புகளை எளிமைப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு மற்றும் பிரெஞ்சிந்திய தொடர்புகள் ஆகியவற்றையும் இலங்கை துணைத் தூதரிடம் எடுத்துரைத்தார். புதுச்சேரி தூய்மையான நகரமாக இருப்பதாக தெரிவித்த இலங்கை துணைத்தூதர். ஆளுநரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதே போல் முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையிலுள்ள அவரது அறைக்கு சென்று சந்தித்தார்.

அச்சந்திப்பு தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வெங்கடேஸ்வரனிடம் கேட்டதற்கு, "காரைக்கால்- இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து பற்றி முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி புதுச்சேரி அரசு தரப்பில் விசாரித்தபோது, "காரைக்காலில் இருந்து இலங்கையில் ஜாப்னா துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம். கப்பல் போக்குவரத்து தொடங்கிய பிறகு காரைக்காலில் இருந்து இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம். இதற்காக ரூ.7 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தக் கப்பல் போக்குவரத்து மூலம் ஆன்மிக பயணமாக இலங்கையில் இருந்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் காரைக்காலுக்கு வருகை தருவார்கள். இதனால் காரைக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள தமிழகப் பகுதியில் சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சி பெறும்." என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x