Published : 03 Jul 2021 03:15 AM
Last Updated : 03 Jul 2021 03:15 AM

கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட - முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் குண்டர் சட்டத்தில் கைது : தி.மலை எஸ்.பி., பவன்குமார் நடவடிக்கை

திருப்பதி பாலாஜி.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் திருப்பதி பாலாஜியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தி.மலை, பெரும்பாக்கம் சாலை எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன்(46). அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் தீவிர ஆதரவாளரான இவர், கட்டப்பஞ்சாயத்து, மண் மற்றும் மணல் கடத்தல், தொழிலதிபர்கள், நில வணிகர்கள் மற்றும் மக்களை மிரட்டி பணம் பறித்தல், இயற்கை வளங்களை கொள்ளையடித்தல் உட்பட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் மீது, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு குற்ற சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. தி.மலை நகர காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், கிராமிய காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், கிழக்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மலை நகர காவல் நிலையத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தி.மலை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் 38 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலை உள்ளிட்ட அரசு இடத்தில் இருந்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வட்டாட்சியர் வெங்க டேசன் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருப்பதி பாலாஜி கைது செய்யப்பட்டு போளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கட்டப்பஞ்சாயத்து மற்றும் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருப்பதி பாலாஜி யின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போளூர் கிளை சிறையில் இருந்த திருப்பதி பாலாஜியிடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை கிராமிய காவல்துறை யினர் வழங்கி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x