

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில், இரு நாட்டு அரசுகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அடுத்த தலைவாசல் கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா கட்டுமானப் பணிகள் பெரும்பாலானவை இந்த ஆண்டுக்குள் நிறைவடையும். இதரப் பணிகள் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும். இங்குள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்போது 40 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டில் இருந்தும் மாணவர்கள் இங்கு கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
மீன் வளத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்த நிலைமாறி, தற்போது 5-ம் இடத்தில் உள்ளது. மீண்டும் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆந்திராவில் நன்னீர் மீன் வளர்ப்பு மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுகின்றனர். அங்கு வயல்களில் நெல் விளைவிப்பதுபோல மீன்களை உருவாக்கும் வகையில் மீன் வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படுகிறது.
வயல்களில் மீன் வளர்க்க மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறுவதால், அதற்கு தீர்வு கண்டு என்னென்ன தடைகள் ஏற்படுகிறதோ அவற்றை நீக்கி, திட்டங்களை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரையும் தொடர்பு கொண்டு, மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். இந்த நிகழ்வு விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் ஜவஹர், சேலம் ஆட்சியர் கார்மேகம், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.