Published : 01 Jul 2021 03:16 AM
Last Updated : 01 Jul 2021 03:16 AM

திண்டுக்கல் மாவட்ட முகாமில் வசிக்கும் - இலங்கை தமிழர்களுக்கு ரூ.20 கோடியில் 1000 குடியிருப்புகள் : சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சிமஸ்தான்

திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கிய அமைச்சர்கள் கே.எஸ்.செஞ்சிமஸ்தான், ஐ.பெரியசாமி.

திண்டுக்கல்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு முதற்கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.செஞ்சிமஸ்தான் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலங்கை அதிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தோட்டனூத்து, அடியனூத்து கோபால்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குனர் ஜெசிந்தாலாசரத் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.எஸ்.செஞ்சிமஸ்தான் ஆகியோர் இலங்கை அகதிகள் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து முகாமில் வசிப்பவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகளாக அரிசி, மளிகை பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர். அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், இலங்கை அகதிகள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்று தருவதற்கான முயற்சியினை தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளார். இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார், என்றார்.

அமைச்சர் கே.எஸ்.செஞ்சிமஸ்தான் பேசுகையில், தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர் அகதிகளுக்கு முதற்கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை வக்பு வாரியத்துக்கு சொந்தமான 7000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவில் கையகப்படுத்தி வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்படும். வக்பு வாரியத்தின் சொத்துக்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு உடனுக்குடன் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x