Published : 01 Jul 2021 03:16 AM
Last Updated : 01 Jul 2021 03:16 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி - மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

மதுரை பெத்தானியாபுரத்தில் ஹெல்மேட் அணிந்து சைக்கிளில் ஊர்வலமாகச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மதுரை மாநகர் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மீனாம்பாள்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் பகுதிக்குழு செயலாளர் பாலு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.சரவணன், எஸ்யூசிஐ மாவட்டச் செயலாளர் வால்டர், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) மாவட்டச் செயலாளர் மதிவாணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பழங்காநத்தம் உழவர் சந்தை எதிரில் மார்க்சிஸ்ட் பகுதி குழுச் செயலாளர் கா.இளங்கோவன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

பெத்தானியாபுரம் அண்ணா பிரதான வீதியில் பகுதிக் குழு உறுப்பினர் சங்கிலி பாண்டி தலைமையிலான கட்சியினர் ஹெல்மெட் அணிந்து சைக்கிளில் அப்பகுதி முழுவதும் சுற்றி வந்தனர். பின்னர் விறகு அடுப்பில் சமையல் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x