Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM
சீன தூதரகம் வழங்கிய மருத்துவ உபகரணங்களை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று தருமபுரி எம்பி வழங்கினார்.
தருமபுரி எம்பி செந்தில்குமார், தருமபுரி மாவட்ட கரோனா சிகிச்சைக்கு பயன்படும் வகையிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிட சீன தூதரகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையேற்று சீன தூதகரம் சார்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 200 ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை, எம்பி செந்தில்குமார் நேற்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் குமுதவள்ளியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தாய்-சேய் நல சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை யும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கரோனா தொற்று இரண்டாம் அலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற சூழல்களையும் எதிர்கொண்டு மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பலரையும் காப்பாற்றினர். தொற்று பரவல் தற்போது ஓரளவு குறைந்துள்ள நிலையில் படுக்கைகள் பற்றாக்குறை சூழல் மாறியுள்ளது. கரோனா மூன்றாம் அலை வந்தால் அதை எதிர்கொள்ளும் வகையில் 1500 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாய்-சேய் நல கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
தற்போது இந்தக் கட்டிடம் தற்காலிகமாக கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். கரோனாவால் தருமபுரி மாவட்டத்தில் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் வகையில் இவர்களின் பெற்றோரின் இறப்புக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT