தூத்துக்குடி மாவட்டத்தில் - வளர்ச்சி பணிகளை தொய்வின்றி முடிக்க அமைச்சர் அறிவுரை :

வைகுண்டம் அரசு மருத்துவமனையில்  தற்காலிக அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு பணி  நியமன கடிதத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
வைகுண்டம் அரசு மருத்துவமனையில் தற்காலிக அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு பணி நியமன கடிதத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.சரவணன், வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலும், வைகுண்டம் பேரூராட்சி பகுதியிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள்குறித்தும், இன்னும் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளில் தொய்வு உள்ளது. பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கவேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அதில்தகுதியானவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்த்து ஏழை, எளிய மக்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் வைகுண்டத்தை சேர்ந்த தாய் - தந்தையை இழந்த பேச்சியம்மாள் என்ற பிரியா என்பவர் தனக்கு வேலைவாய்ப்பு கோரி பயிற்சி உதவி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அவருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தனது சொந்த பணத்தில் இருந்து ஊதியம் வழங்க முன்வந்ததையடுத்து வைகுண்டம் அரசு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் அலுவலக உதவியாளராக அவர் பணி நியமனம் செய்யப்பட்டார். பணி நியமன கடிதத்தை பேச்சியம்மாளிடம் எம்எல்ஏ முன்னிலையில் அமைச்சர் வழங்கினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சண்முகத்தாய், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினேஷ், சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கமங்கலம் ஊராட்சி குரும்பூர் முஸ்லிம் தெருமற்றும் பரதர் தெருவில் ரூ.17 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அமைச்சர் திறந்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in