Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM

முன்னாள் அமைச்சரின் உறவினர்களிடம் மீட்கப்பட்ட - கோயில் இடத்தில் உள்ள கட்டிடத்தை : 12 வாரங்களில் அகற்ற வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் சேங்கைமாறன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை நகர் கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 9.58 ஏக்கர் நிலம் காஞ்சிரங்கால் குரூப், மகாசிவனேந்தல் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். முன்னாள் அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அறநிலையத்துறை தரப்பில், ‘‘சம்பந்தப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. கட்டிடத்தை ஜூன் 30-க்குள் ஆக்கிரமிப்பாளர்களே அகற்ற வேண்டும் என சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அறநிலை யத்துறையின் நோட்டீஸின்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடத்தை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை தரப்பில் இடித்து அகற்ற வேண்டும். இதற்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை களையும் 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x