

கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் அமைப்பு பொறியியல் துறை இறுதியாண்டு மாணவர் பி.பரத்ராஜ், மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறை இறுதியாண்டு மாணவி ஏ.லாவண்யா ஆகியோர் நாட்டுநலப்பணித்திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் தூய்மை பாரத் திட்டம், உன்னத் பாரத் அபியான், போஷான் அபியான், ஜல்சக்தி அபியான் மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கல்லூரி தத்தெடுத்துள்ள நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, அய்யனேரி, படர்ந்தபுளி, வில்லிசேரி மற்றும் தோணுகால் ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருவரும் களப்பணியாற்றி வருகின்றனர். மேலும், புதுடெல்லியில் உள்ள ஷாக்சி என்னும் அரசு சாரா தன்னார்வலர் அமைப்பில் இருவரும் போக்ஸோ சட்டம் குறித்த பயிற்சியை நிறைவு செய்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பரத்ராஜ், லாவண்யாவின் சேவைகளை பாராட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகம், 2019-2020-ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர் விருதுகளை அறிவித்துள்ளது. விருது பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரியின் இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.