

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையர்களில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவான கொள்ளையர்களை கைது செய்ய தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் மேற்பார்வையில் தியாகராய நகர் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் ஒரே குழுவாக தமிழகத்தில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதையடுத்து ஹரியாணா மாநிலம், பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவரை கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 5 நாள் காவலில் எடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்ததில் அவர் கொடுத்த தகவலின்பேரில் ஹரியாணா, பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த வீரேந்திர ராவத் என்ற மற்றொரு நபரையும் கைது செய்து போலீஸார் சென்னை அழைத்து வந்தனர்.
அமீர் அர்ஷ் கொள்ளையடித்த பணத்தை சென்னை கோடம்பாக்கம் தனியார் வங்கியின் சிஎடிம் இயந்திரம் மூலம் அமீர் அர்ஷ் தாயாரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், ஹரியாணா மாநிலத்தில் பதுங்கி இருந்த நசீம் உசேன் என்ற மற்றொரு நபரையும் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதற்கிடையில், போலீஸ் காவலில் உள்ள முக்கிய கொள்ளையனான அமீர் அர்ஷை தனிப்படை போலீஸார் பெரியமேட்டில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்துக்கு நேற்று மதியம் 2.45 மணியளவில் முகத்தை மூடி அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கிருந்த இயந்திரத்தில் கொள்ளையடித்தது எப்படி என அமீர் அர்ஷ் போலீஸார் முன்னிலையில் சுமார் அரை மணி நேரம் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்.
அப்போது, பணம் செலுத்தும் வசதி கொண்ட ஏடிஎம் இயந்திர சர்வரை முடக்கியது எப்படி என்பது குறித்தும் நிதானமாக செய்து காண்பித்தார். இந்த ஏடிஎம் இயந்திரத்தில் மட்டும் கடந்த 15-ம் முதல் 17ம் தேதி வரை 190 முறை ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அடுத்தடுத்து சுமார் ரு.16 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை வீடியோவில் போலீஸார் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள மற்ற இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.