

கோவில்பட்டி: மணியாச்சி அருகே கீழப்பூவாணியில் கணவரை கொலை செய்ததாக பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
மணியாச்சி அருகே கீழப்பூவாணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (56), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (44). கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் 6 ஆண்டுகளாக பிரித்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாரியப்பன் கீழப்பூவாணியில் உள்ள புஞ்சை நிலத்தில் பலத்த காயத்துடன் கிடந்தார். அவரை மணியாச்சி போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார். இதுகுறித்து மணியாச்சி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், நேற்று முன்தினம் மாலை பேச்சியம்மாள் கீழபூவாணியில் உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு மது போதையில் வந்த மாரியப்பன், அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கல் மற்றும் கம்பால் தாக்கியதில் படுகாயமடைந்த மாரியப்பன் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்தது. பேச்சியம்மாளை மணியாச்சி இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.