

பொதுப்போக்குவரத்தை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் இருந்து கரூர், திருப்பூர் மாவட்டங்களின் எல்லை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் பொதுப் போக்குவரத்து தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக அரசு பேருந்துகள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்து தயாராகி வருகின்றன. பயணிகள் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும். 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என அரசு போக்குவரத்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும், கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தவும் திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திண்டுக்கல்- திருப்பூர் மாவட்ட எல்லைகளான அப்பியம்பட்டி நால்ரோடு, சாமிநாதபுரம் வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லைகளான வேடசந்தூர், குஜிலியம்பாறை அருகேயுள்ள கூடலூர் வரையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.