

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு கடந்த 50 நாட்களாக சிறப்பான சேவை செய்த மாணவர்கள், தொற்று குறைந்ததை தொடர்ந்து தங்களது பணிகளை நிறைவு செய்து, நேற்று மனநிறைவோடு விடைபெற்றுச் சென்றனர்.
கரோனா தொற்றின் 2-வது அலையால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சேவை செய்ய இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் முன்வந்தனர்.
மாணவர்களின் சமூகப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 27 மாணவர்கள் கடந்த மே மாதம் 10-ம் தேதி தங்கள் சேவையைத் தொடங்கினர். தொடர்ந்து வந்த நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 36 பேர் தங்களை முழு மையாக இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் சிலரும் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கரோனா நோயாளிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்குதல், அவர்களது நிலையை உறவினர்களுக்கு தெரிவித்தல், கரோனா தடுப்பூசி போடுவோரின் விவரங்களை கணினி மற்றும் நோட்டு புத்தகத்தில் பதிவு செய்தல், கரோனா பரிசோதனை செய்ய வருவோரின் விவரங்கள் மற்றும் பரிசோதனை முடிவுகளை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்தல், மருத்துவமனை நுழை வாயிலில் உள்ள கரோனா உதவி மையத்தில் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளை கடந்த 50 நாட்களாக மாணவர்கள் செய்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து, தற்போது தினசரி பாதிப்பு 50-க்கு கீழ் வந்துள்ளது. தினசரி குணமடைவோர் எண்ணிக்கை சராசரியாக 200-க்கு மேல் உள்ளது. இதனால் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதையடுத்து 50 நாள் சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டு மாண வர்கள் மனநிறைவோடு மருத்துவமனையில் இருந்து விடைபெற்றனர். மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாணவர்களை பாராட்டி அனுப்பி வைத்தார்.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ஜாய்சன் கூறியதாவது: கரோனா நோயாளிகளுடனும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுடனும் கடந்த 50 நாட்களாக நெருங்கி பழங்கி வந்தோம். இதனால் மருத்துவ மனையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டோம்.
இந்த நாட்களில் கனிமொழி எம்பி, தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் மருத்துவமனை முதல்வர் நேரு உள்ளிட்டோர் எங்களை பாராட்டி ஊக்கப்படுத்தினர். இந்த சேவை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்ததுடன் எதிர்கால வாழ்கைக்கான அனுபவத்தையும் கற்றுத்தந்துள்ளது என்றார்.