Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க - நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா : கலந்தாலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடி நெல் கொள்முதல் குறித்த விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: கோனேரிராஜபுரம் கே.எஸ்.வீரராஜேந்திரன்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யும்போது சரியான எடையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.

சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்: மீண்டும் நடமாடும் நெல் கொள்முதல் நடைமுறையை பின்பற்றி உழவர்களின் வயலுக்கே வாகனம் நேரில் வந்து கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 100 மூட்டைகள் நடமாடும் கொள்முதல் அலுவலரால் கொள்முதல் செய்யப்பட வேண்டும். முறைகேடுகளைக் களைய நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார்: அவ்வப்போது மழை பெய்யும் சூழல் இருப்பதால், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பாதுகாக்க, நிலையங்களில் தேவையான தார்ப்பாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்: தற்போது கோடை நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் திறக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, அறுவடை நடைபெற்று வரும் அனைத்து கிராமங்களிலும் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.

கணபதி அக்ரஹாரம் ஜி.சீனிவாசன்: அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். போதுமான லாரிகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். நெல் உலர்த்தும் இயந்திரத்தை அமைக்க வேண்டும். தேவையான சாக்குகள் இருப்பு வைக்க வேண்டும். டோக்கன் வழங்குவதை செல்போன் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அன்றைய நாளிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x