

பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆவடியில் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் 41 பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில்,நிரந்தர ஊழியர்கள் 82 ஆயிரம் பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 45 ஆயிரம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி, தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முயற்சித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த 16-ம் தேதி 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளை, 7 பொதுத்துறை நிறுவனங்களாகப் பிரித்து மாற்றியுள்ளது. இதைக் கண்டித்து, நேற்று நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள படைத்துறை உடைத் தொழிற்சாலை (ஓசிஎஃப்), இன்ஜின் தொழிற்சாலை முன்பாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அவர்கள் மத்தியஅரசுக்கு எதிராக கோஷமிட்டதோடு, உருவ பொம்மையையும் எரித்தனர். அடுத்தகட்டமாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தில், போராட்டக் குழு தலைவர் முரளிதரன், கஜேந்திரன் மற்றும் சத்தியசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.