Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

­­­தெரு விளக்குகள் கொள்முதல் மற்றும் பராமரிப்பில் முறைகேடு - தருமபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு :

தெரு விளக்குகள் கொள்முதல் மற்றும் பராமரிப்பில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தருமபுரியைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தருமபுரி மாவட்டம் பருவதனஹள்ளி ஊராட்சியில் எல்இடி மற்றும் சிஎப்எல் தெரு விளக்குகள் பொருத்துவதற்கும், மின்கம்பங்களை பராமரிப் பதற்கும், மின் கட்டணத்துக்கும் செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளேன்.

ஊராட்சி பொது தகவல் அலுவலர் அளித்துள்ள பதிலில், கடந்த 2020 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஒரு பல்பு ரூ.710-க்கு வாங்கப்பட்டதாகவும், மின்கம்ப பராமரிப்புக்கு தலா ரூ.820 செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை பல்புகள் வாங்கப்பட்டன போன்ற விவரம் இல்லை.

மேல்முறையீட்டு அதிகாரியான பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்துள்ள பதிலில், கடந்த 2017-18 முதல் 2019-20 வரை எல்இடி பல்புகள் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், 2020-21-ம் ஆண்டில் 626 எல்இடி பல்புகள் தலா ரூ.382 வீதம் வாங்கப்பட்டு, அவற்றை மின்கம்பத்தில் பொருத்த தலா ரூ.20 செலவிடப்பட்டுள்ளது. ஆனால் பராமரிப்புக்கென எந்த செலவும் செய்யப்படவில்லை, என தெரிவித்துள்ளார்.

தகவல்களில் முரண்பாடுகள் உள்ளது. தெருவிளக்குகள் கொள்முதல் மற்றும் பராமரிப்பில் முறைகேடுகள் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த மார்ச் மாதம் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் மற்றும் நீதிபதி ஆர்.சுப்பையா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பருவதனஹள்ளி ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தர விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x