Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

ராதாபுரம் கால்வாயில் 4 மாதம் தண்ணீர் திறக்க குமரியில் எதிர்ப்பு :

கன்னியாகுமரி மாவட்டம் கோதை யாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ராதாபுரம் தாலுகா பாசனத்துக்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதுகுறித்த அரசாணையில், `வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை விநாடிக்கு 150 கனஅடிக்கு மிகாமல், நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பாசனத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில், பாசன சபை கூட்டமைப்பு தலைவர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மதாஸ், பாசனத்துறை நிர்வாகி கள் தாணுபிள்ளை, தங்கப்பன், செண்பகசேகர பிள்ளை மற்றும் நிர்வாகிகள், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்திடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 79 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் தண்ணீர் இருப்பை பொறுத்து 15 நாட்களில் இருந்து 30 நாட்கள் வரை மட்டும் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, `ஜூன் 16-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை நான்கரை மாதம் ராதாபுரத்துக்கு தண்ணீர் விடவேண்டும்’ என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், குமரி மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.

ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் விடுவதை எதிர்க்கவில்லை. ஆனால், குமரி விவசாயிகளிடம் கருத்து எதுவும் கேட்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை எதிர்க்கிறோம். குமரி மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் இந்த அரசாணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்துவிட்டு, குமரி மாவட்டம் மற்றும் ராதாபுரம் விவசாயிகளை பாதிக்காதவாறு, விவசாயப் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு புதிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ராதாபுரம் கால்வாயில் நான்கரை மாதம் தண்ணீர் திறக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இல்லையெனில், குமரி மாவட்ட விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். முறையான நீர்விநியோகம் கேட்டு நீதிமன்றத்தை நாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x