

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் வரவேற்றார்.
அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆடியோக்களை வெளியிடும் சசிகலாவுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயலாற்றுவோம் என உறுதி ஏற்கிறோம். தெளிந்த நீரோடையில் கற்களை வீசலாம், குழப்பங்களை உருவாக்கலாம் என திட்டமிட்டு நடத்திடும் நாடகத்தை முறியடிப்போம் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.